கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வரத்து குறைந்ததன் காரணமாக, தமிழகத்தில் சன்ன (உயர் ரக) அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மோட்டா ரக நெல் அதிகமாக விளைவதாகவும், அதில் பெரும்பகுதியை பொது வினியோகத் திட்டத்திற்காக அரசு கொள்முதல் செய்வதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் சன்ன ரக அரிசி விளைச்சல் மாநிலத்தில் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் ஆண்டுதோறும் அரிசி தேவை 91 லட்சம் டன் எனவும், உற்பத்தி 75 லட்சம் டன் எனவும் கூறப்படுகிறது. இதில் 5 லட்சம் டன் கேரளாவுக்கு அனுப்பப்படுவதால், மாநிலத்தில் சுமார் 21 லட்சம் டன் பற்றாக்குறை உருவாகிறது.
இந்த இடைவெளியை நிரப்ப ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் சில பகுதிகளில் போதிய மழை இல்லாததால் சன்ன நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்ததன் விளைவாக விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த நெல்-அரிசி வியாபாரி முனுசாமி கூறுகையில், கடந்த மாதம் வரை ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கே.என்.எம்., ஆர்.என்.ஆர். வகை நெல் தினமும் சுமார் 200 லாரிகளில் வந்ததாகவும், தற்போது அந்த வரத்து நின்றுவிட்டதாகவும் தெரிவித்தார். இதனால் மொத்த சந்தையில் 26 கிலோ சன்ன அரிசி மூட்டை ரூ.1,150 இருந்து ரூ.1,250 ஆக உயர்ந்ததாகவும், மொத்த விலையில் கிலோவுக்கு ரூ.3–4 வரை, சில்லரையில் ரூ.5–7 வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.





