புதுடில்லி: வெளிநாட்டு கொள்கை தொடர்பான ஒரு முக்கிய விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக மூத்த தலைவர் மற்றும் லோக்சபா எம்.பி. சசி தரூர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

பிரான்சின் ஈவியான் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி சந்தித்தார். அந்த சந்திப்பில், ஓமன் வளைகுடாவில் நடந்த தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரத்தை மோடி எடுத்துரைக்கவில்லை என்றும், அமெரிக்காவிடம் மன்னிப்பு கோர வலியுறுத்தவில்லை என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.

ஆனால் தரூர், டிரம்புடன் நடந்த பொது மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளின் போது அந்த விவகாரத்தை பிரதமர் மோடி தெளிவாக எடுத்துரைத்ததாக கூறினார். போர்க்கால சூழலில் வணிகக் கப்பல்களில் பணிபுரியும் மாலுமிகள் தாக்குதலுக்கு இலக்காகக் கூடாது என்ற செய்தியை தெரிவிப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய மாலுமிகள் இந்தியக் கொடியிடப்பட்ட கப்பல்களிலும் பிற கப்பல்களிலும் பணிபுரிவதாகவும், அவர்கள் கட்டளையை மீறியதாக சந்தேகம் இருந்தாலும் அவர்களை தடுக்க வேண்டுமே தவிர கொல்லக் கூடாது என்றும் தரூர் வலியுறுத்தினார். அவரது கருத்துகள் காங்கிரஸ் மேலிடத்தில் எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, தரூரின் கருத்துகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தியை விமர்சித்தார்; மோடியின் ராஜதந்திர அணுகுமுறையை காங்கிரஸ் தலைவர்களே பாராட்டுகின்றனர் எனவும் அவர் கூறினார்.