சென்னை: முதல்வர் விஜய் பா.ம.க.வுடன் திடீரென நெருக்கம் காட்டுவதற்கு, வி.சி.க. மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தரும் அழுத்தம் மற்றும் தொடர்ந்து வரும் விமர்சனங்களே முக்கிய காரணம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், வி.சி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகியவை த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன; இதில் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் இணக்கமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் இடதுசாரிகள் மற்றும் வி.சி.க. பல்வேறு விவகாரங்களில் அரசை நேரடியாக விமர்சித்து வருகின்றன. அரசு நிர்வாகம், அதிகாரிகள் மாற்றம் போன்ற விஷயங்களில் வி.சி.க. தலையீடு அதிகம் இருப்பதாகவும், அது அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை த.வெ.க. பக்கம் இழுக்கும் முயற்சிக்கு வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை அவர்கள் “குதிரை பேரம்” என விமர்சித்த நிலையில், த.வெ.க. தலைமையிடம் தர்மசங்கடம் ஏற்பட்டதாகவும், “அமைச்சரவையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறுவோம்” என திருமாவளவன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பின்னணியில், நான்கு எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ம.க.வுக்கு த.வெ.க. கூடுதல் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. முதல்வராக ஆன பின் விஜய், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்தார்; ஜாதிவாரி சர்வே கோரி பா.ம.க. நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திலும் த.வெ.க. பங்கேற்றது.
அனைத்து கட்சி கூட்ட தீர்மானத்தை அன்புமணி முதல்வரிடம் நேரில் வழங்கியதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் “சமூக நீதி சர்வே” நடத்தப்படும் என கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்க பா.ம.க. எம்.எல்.ஏ.வும் அன்புமணியின் மனைவியுமான சவுமியா முதல்வரை சந்தித்தபோது, காவிரி மேகதாது அணை விவகாரத்தில் சட்டசபையில் அவர் பேசியதை விஜய் பாராட்டியதாகவும், இது பா.ம.க. தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.




