பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி தடுப்புக்கான சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக் குழு (எப்.ஏ.டி.எப்.) துணைத் தலைவராக இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்.) மூத்த அதிகாரி விவேக் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாரிஸில் சமீபத்தில் நடைபெற்ற அமைப்பின் பொதுக் குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

‘ஜி-7’ நாடுகளின் முன்முயற்சியால் 1989 ஜூலையில் பாரிஸில் தொடங்கப்பட்ட எப்.ஏ.டி.எப்., ஆரம்பத்தில் உலகளவில் அதிகரித்த கள்ளப் பணப் பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும் கொள்கைகளை வகுப்பதற்காக உருவாக்கப்பட்டது. 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு, பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும் அதன் பணிக்கூறு விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது மத்திய கலாசாரத் துறையின் செயலராக பணியாற்றி வரும் விவேக் அகர்வால், அடுத்தாண்டு ஜூலை வரை ஒரு ஆண்டு காலத்திற்கு இந்தப் பதவியை வகிக்க உள்ளார்.

1994ம் ஆண்டு மத்தியப் பிரதேச கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், எப்.ஏ.டி.எப்.க்கான இந்தியக் குழுவுக்கு முன்பே தலைமை தாங்கியவர். மேலும் இந்திய நிதி புலனாய்வு பிரிவு (எப்.ஐ.யு.) இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது நியமனத்தை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

2010ல் எப்.ஏ.டி.எப். அமைப்பில் இந்தியா இணைந்ததற்குப் பிறகு, சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் இந்த சர்வதேச அமைப்பில் இந்தியா முதல்முறையாக துணைத் தலைவர் பதவியை வகிக்கிறது.