சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை பலப்படுத்தும் முயற்சியாக, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைப்பதற்கான ரகசிய பேச்சு தொடங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் சில நிர்வாகிகள் கூறுவதன்படி, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த பலர், இடைத்தேர்தலுக்கு முன் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் மற்றும் வி.கே. சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், “அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்; பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்” என வலியுறுத்தி தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, பழனிசாமியின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க மூத்த தலைவர் ஒருவர் இடைநிலையராக இருந்து பின்னணி பேச்சை முன்னெடுத்து வருவதாகவும் தகவல். இதற்கிடையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அவரது சகோதரர் திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் மற்றும் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சசிகலா கட்சியில் இணைந்தால் அவருக்கு அவைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தினகரன் இணைவதற்காக துணை பொதுச்செயலர் பதவி மற்றும் ராஜ்யசபா எம்.பி. பதவி வேண்டும் என அவரது தரப்பு நிபந்தனை வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.வில் ஆறு துணை பொதுச்செயலர் பதவிகளை உருவாக்கும் திட்டம் பேசப்படுவதாகவும், இளைஞர்களை கட்சியில் சேர்க்க வியூகம் வகுக்கப்படுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தலில் குறைந்தது இரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைத்தால் கட்சியினர் பிற கட்சிகளுக்கு செல்லும் போக்கு தடுக்கப்படும் என்பதால், ஒன்றிணைப்பு அவசியம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.