அயோத்தி ராமர் கோவிலுக்காக பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகாரை உத்தர பிரதேச அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரித்து வருகிறது. விசாரணை தொடரும் நிலையில், கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் அயோத்தியை விட்டு வெளியேறக் கூடாது என SIT உத்தரவிட்டுள்ளது.

ராமர் கோவிலை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகிக்கிறது. சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாகவும், 24 கோடி ரூபாய் வரை கணக்கில் இல்லாமல் போனதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

இந்த புகார்களைத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அறக்கட்டளையே அரசிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஜூன் 13-ம் தேதி மூன்று அதிகாரிகள் கொண்ட SIT அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக அயோத்தியில் முகாமிட்டு அறக்கட்டளை நிர்வாகிகள், பிரதான அர்ச்சகர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், ‘பிராண பிரதிஷ்டை’ விழாவின் போது கோவில் அடித்தளத்தில் வைப்பதற்காக நகை வியாபாரிகள் வழங்கிய 60 கிலோ வெள்ளிக் கட்டிகள் தொடர்பான தகவல்கள் கோவில் கணக்கு பதிவேட்டில் இடம்பெறவில்லை என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வைரம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த நன்கொடைகளை ஆவணப்படுத்துவதில் குறைபாடுகள் இருக்கலாம் என்றும், சில நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அளித்த பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததாகவும் SIT குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி–பிப்ரவரி காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த போது இத்தகைய முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தினசரி புலனாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட விசாரணைத் தகவல்கள் டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு முதல்வர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது; இறுதி அறிக்கை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன், அறக்கட்டளை வாங்கிய நிலங்கள் சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு, கட்டுமானப் பொருட்கள் கொள்முதல் மற்றும் அதற்கான நிதி பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை விரிவடைந்துள்ளது.