சென்னை: திமுக பொதுச்செயலர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று துரைமுருகன் உறுதியாக தெரிவித்துள்ளதாகவும், இதன் பின்னணியில் ‘இணை பொதுச்செயலர்’ என்ற புதிய பொறுப்பை உருவாக்க கட்சி தலைமை பரிசீலிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்க கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
துரைமுருகனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளித்து, பொதுச்செயலர் பொறுப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டதாகவும், ஆனால் அதற்கு துரைமுருகன் சம்மதிக்கவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன்னை அணுகியவர்களிடம், உடல்நலம் பாதிக்கப்பட்ட காலத்திலும் மறைந்த அன்பழகனிடம் பதவி விலக யாரும் கூறவில்லை என்று துரைமுருகன் குறிப்பிட்டதாகவும், 2027 வரை தன் பதவிக்காலம் இருப்பதால் அதுவரை தொடர்வேன்; உயிர் இருக்கும் வரை பொதுச்செயலர் பதவியை விடமாட்டேன் என்றும் கூறியதாகவும் தகவல்.
மேலும், சமீப காலங்களில் கட்சிக்குள் துரைமுருகன் ஓரங்கட்டப்படுவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். ‘இண்டியா’ கூட்டணியிலிருந்து திமுக விலகும் முடிவுக்கு முன் அவரிடம் ஆலோசிக்கப்படவில்லை என்றும், வழக்கமாக பொதுச்செயலர் பெயரில் வரும் எம்.எல்.ஏ.க்கள் கூட்ட அறிவிப்பு இந்த முறை கொறடா எ.வ.வேலு பெயரில் வெளியானதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். துரைமுருகன் தொடர்ந்து விலக மறுத்தால், ‘இணை பொதுச்செயலர்’ என்ற புதிய பதவியை உருவாக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.





