திருநெல்வேலியில் நடைபெற்ற ஹிந்து முன்னணி மாநில பொதுக்குழு கூட்டத்தில், சமூக மற்றும் மத சார்ந்த பல்வேறு விஷயங்களை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், தென் பாரத அமைப்பாளர் பக்தன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சமுதாய மற்றும் ஆன்மிக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
முக்கியமாக, தமிழக கோவில்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு தடை விதிக்கக் கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சந்திக்கும் சிரமங்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்; திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.
மேலும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.





