தமிழ்நாட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோரிடம் பெருமளவு வாடகை நிலுவை இருப்பதாக துறை தெரிவித்துள்ளது. வணிக வாடகை பிரிவில் மட்டும் சுமார் ரூ.250 கோடி வரை பாக்கி இருப்பதாக கூறிய அமைச்சர் ரமேஷ், வருவாயை சீர்படுத்த உடனடி வசூலிப்பு நடவடிக்கைகள் தேவை என அறிவுறுத்தினார்.

அமைச்சர் தலைமையில் நடைபெற்ற துறை ஆய்வு கூட்டத்தில், மண்டல இணை ஆணையர்களுக்கு நிலுவை தொகையை விரைவாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கப்பட்டது. மேலும், கோவில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கோவில் நிர்வாகம் புகார் அளித்தால், உள்ளூர் காவல் நிலையங்களில் அதை ஏற்காமல், காவல் ஆணையர் அலுவலகத்தில் மட்டுமே பெறுகின்றனர் என அதிகாரிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இதையடுத்து, புகார்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், கோவில் நிலங்களில் குடியிருப்போரில் மாதந்தோறும் சுமார் 20% பேர் மட்டுமே முறையாக வாடகை செலுத்துவதாகவும், மற்றவர்களிடமிருந்து நிலுவை மற்றும் அபராத தொகைகள் முழுமையாக வசூலிக்கப்படாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சிலர் குடியிருப்பு பகுதிகளை வணிக நோக்கத்திற்காக மாற்றி பயன்படுத்துவதால் ஆய்வின்போது வணிக வாடகை நிர்ணயம் செய்யப்படுவதாகவும், இதனால் குடியிருப்போர் சங்கம் அமைத்து எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வசூலிப்பில் சிக்கல் உருவாகிறது என்றும் கூறப்பட்டது. 2016 அரசாணை அடிப்படையில் முன்பு நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 15% உயர்வு என முடிவு செய்யப்பட்டிருந்தாலும், 2016க்கு பிறகு புதிய வாடகை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், புதுக்கோட்டை விட்டோபா கோவில் மற்றும் காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில் புதிய திருமண மண்டபம் கட்ட போதிய நிதி மற்றும் இடவசதி இல்லாததால் பணிகளை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதுபோல் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ள கடந்த ஆட்சிக் கால அறிவிப்புகளை கைவிட அரசுக்கு முன்மொழிவு அனுப்புமாறு ஆணையர் கேட்டுக்கொண்ட நிலையில், கோவில் செயல் அலுவலர்கள் அதற்கான விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.