நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, தன்னை பெயர் சொல்லாமல் மறைமுகமாக மிரட்டுவதாக தெரிவித்தார். இது தனிநபர்களா, உட்கட்சியா, எதிர்க்கட்சியா என்ற கேள்விக்கு, மிரட்டல்கள் மறைமுகமாகவே வருவதாக கூறினார்.

தன் தொகுதி மற்றும் குறிப்பிட்ட வார்டுகளில் பிரச்னை இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்பி, போலி பெயர்களில் பேசுவதாகவும், விசாரித்தபோது அவற்றில் உண்மை இல்லை எனவும் அவர் கூறினார்.

மேலும், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தனது பிஏவுக்கு போன் செய்து மிரட்டுவதாகவும், “நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்” என வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார். பைக் பஞ்சர் ஆனதாக சொல்லி பஞ்சர் கடை எங்கே என்று கேட்டு நக்கலாக சிரிப்பது போன்ற தொந்தரவு அழைப்புகளும் வருவதாக கூறினார்.

இது எதிர்க்கட்சியின் சூழ்ச்சி; திட்டமிட்டு தனது தொகுதிக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும், மக்களுக்கு சேவை செய்ய விடாமல் தடுப்பதே நோக்கம் எனவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். எவ்வளவு தொந்தரவு வந்தாலும் சோர்ந்து போகாமல் மக்கள் பணியை தொடர்வோம் என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் இதுவரை எந்த புகார் மனுவும் அளிக்கவில்லை என்றும், இதை குறையாக அல்ல; தன்னை மேலும் உறுதியாக்கும் ஒன்றாகவே பார்க்கிறேன் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.