பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதன் மூலம் பல நாட்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்மருக்கு அவரது சொந்த கட்சியான தொழிலாளர் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்தது. 100-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அவருக்கு எதிராக நிலைப்பாடு எடுத்ததாகவும், சில அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
நெருக்கடி தொடர்ந்து அதிகரித்ததால், அவர் எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
மேலும் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாகவும், அடுத்து பிரதமராக வர உள்ளவருக்கு தமது ஆதரவு இருக்கும் என்றும் ஸ்டார்மர் தெரிவித்தார்.
முன்னதாக, ராஜினாமா கடிதத்தை அளிக்க அவர் தனது மனைவியுடன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியே வந்தார். அங்கு திரண்டிருந்த மக்களிடம் பேசிய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்த தருணம் பெருமையானதாக இருந்தது என்றும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் நோக்கத்துடன் அரசியலில் நுழைந்ததாகவும் கூறினார்.





