பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில் “பயங்கரவாதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது” என்று மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்தார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

மோடி தலைமையிலான அரசில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளதாக அவர் கூறினார். முந்தைய காலங்களில் மக்கள் நலத் திட்ட நிதி ஏழைகளிடம் சென்றடைவதற்கு முன்பே பாதியில் மாயமாகும் நிலை இருந்ததாக குறிப்பிட்டு, ஜன்தன் கணக்கு–ஆதார்–மொபைல் இணைப்பின் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, 70 ஆண்டுகளாக இருந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் அந்தப் பகுதி இந்தியாவுடன் மேலும் உறுதியாக இணைந்ததாக அவர் கூறினார். முன்பு கல்வீச்சு போன்ற சம்பவங்களும் தேசியக் கொடியை எரிக்கும் நிகழ்வுகளும் நடந்த இடங்களில், இப்போது பள்ளிகளும் கோவில்களும் அமைதியாக செயல்படுவதோடு தேர்தல்களும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைத்த நக்சலைட்டுகளின் ஆட்டம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். தேசிய பாதுகாப்பு விவகாரத்தில், ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டதாகவும், உலக நாடுகள் மோதும் சூழலிலும் மோடி இந்திய மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே நிலைப்பாடு எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

2047-ல் இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, நாட்டை உலகின் தலைசிறந்த வல்லரசுகளில் ஒன்றாக மாற்றுவதே பிரதமரின் இலக்கு என கிஷன் ரெட்டி கூறினார்.