உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பூர்ணியா பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மேல் தளத்தில் செயல்பட்டு வந்த ஒரு பயிற்சி மையத்தில் ஜூன் 22 அன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் மெதுவாகப் பற்றிய தீ, பின்னர் வேகமாக கட்டடத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது.

தீப்பிடித்ததை அறிந்த மாணவர்கள் பீதியடைந்ததாக கூறப்படுகிறது. தப்பிக்க வழியின்றி சிலர் உயிரைக் காப்பாற்ற மாடியிலிருந்து குதித்தனர்.

உள்ளூர் மக்கள் தீயணைப்புத் துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து, கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கட்டடத்தை சூழ்ந்த கரும்புகை காரணமாக பணிகள் தாமதமாகி வருகிறது; உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.