தமிழகம் முழுவதும் நெல் மூட்டைகள் மழையால் பாதிக்காத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது என்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்ததாக வெளியான செய்தியின் எதிரொலியாக, அமைச்சர் சம்பந்தப்பட்ட கிடங்கை நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பிறகு அவர் கூறியதாவது: திறந்தவெளி கிடங்கில் சுமார் 600 நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. இருப்பில் உள்ள நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கியிருந்த இடங்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
திறந்தவெளி கிடங்குகளை மூடப்பட்ட கிடங்குகளாக மாற்ற குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்றும், மழைக்காலத்திற்கு முன் தற்காலிகமாக பாதுகாப்பான சேமிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், நெல் சேதமடைந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.





