நீட் வினாத்தாள் கசிவு புகாரால் ரத்து செய்யப்பட்ட மே 3 தேர்வை விட, நேற்று நடைபெற்ற நீட் மறுதேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை, நாடு முழுவதும் நீட் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. நடப்பாண்டில் மே 3-ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுதும் 22.79 லட்சம் பேர், தமிழகத்தில் 1.42 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. முதல் கட்ட விசாரணையில் கசிவு உண்மை என கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தேர்வுகள் முகமை மே 3 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.

அதன்படி, நேற்று நாடு முழுதும் 551 நகரங்களில் மறுதேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 307 மையங்களில் தேர்வு நடந்தது. காலை 11 மணி முதலே மாணவர்கள் மையங்களுக்கு வரத் தொடங்க, பலத்த சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர். 1:30 மணிக்கு நுழைவாயில்கள் மூடப்பட்டு, தேர்வு 2:00 முதல் 5:15 வரை நடைபெற்றது.

மாலை 5:30 மணியளவில் மாணவர்கள் வெளியே வந்தபோது, நுழைவாயிலில் காத்திருந்த பெற்றோர் அவர்களை வரவேற்றனர்; சிலர் அழுதபடியே வெளியே வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் கூறுகையில், இந்த மறுதேர்வில் உயிரியல், வேதியியல் பகுதிகள் கடினமாக இருந்ததாகவும், மற்றொருவர் இயற்பியல் வினாக்கள் அதிகம் சிரமமாக இருந்ததாகவும் கூறினர்; இதனால் மதிப்பெண் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.