மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் தனது கட்டளைகளைப் பின்பற்றுகிறது என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.

ஜெருசலேமில் நடைபெற்ற சர்வதேச உச்சிமாநாட்டில் பேசிய அவர், “அதிபர் விரும்புவதையெல்லாம் நான் செய்வதில்லை; நான்விரும்புவதையெல்லாம் அவர் செய்வதில்லை” என்று கூறினார். இருவரும் சுதந்திரமும் பெருமையும் கொண்ட நாடுகளின் தலைவர்கள் என்பதால், சில சமயங்களில் கருத்துகள் ஒத்துப்போகாமல் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்றார்.

இவ்வாறு வேறுபாடுகள் இருந்தாலும், இரு நாடுகளின் தலைவர்களும் தங்களது தேசிய செயல் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேலின் நலன்களுக்கும் பாதுகாப்பிற்கும் தான் உறுதியாக நிற்பதாகவும் கூறினார்.

பல நேரங்களில் ஒருமித்த கருத்து இருக்கும்; சில நேரங்களில் இல்லாமலும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், ஒருவருக்கொருவர் இறையாண்மை, தலைமைத்துவம் மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பை மதிப்பதாகவும் தெரிவித்தார்.