அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியை விட்டு விலகத் தீர்மானித்தவர்களிடம் பேசுவதால் பயன் இல்லை என்றும், அதிமுகவை விட்டு வேறு கட்சிகளில் சேர்ந்தவர்களுக்கு மரியாதை கிடைக்காது என்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பழனிசாமி, நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மயிலாடுதுறை, நாகை மாவட்ட நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

நிர்வாகிகள் கூறுகையில், தேர்தல் தோல்விக்கு தலைமையின் முடிவுகளே காரணம் என்ற வகையில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். அதனால், அதனைத் தவிர்ந்த பிற விஷயங்களே கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறினர். மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் த.வெ.க. சமூக வலைதள பிரசாரம் பெரிதாக எடுபடவில்லை என்றும், வேதாரண்யத்தைத் தவிர மற்ற ஐந்து தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றதற்கு கூட்டணி பலமே காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், அ.ம.மு.க. மற்றும் பா.ம.க. கட்சியினர் அதிமுகவினருடன் இணைந்து பணியாற்றவில்லை என்றும், கூட்டணியில் பா.ஜ. இருந்ததால் சிறுபான்மையினர் ஓட்டு முழுமையாக விழவில்லை என்றும் சிலர் தெரிவித்தனர். கட்சியிலிருந்து வெளியேற நினைப்போரை தலைமை அழைத்து பேச வேண்டும் என சில ஒன்றிய செயலர்களும் பரிந்துரைத்ததாக கூறப்பட்டது.

இறுதியாக பேசிய பழனிசாமி, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த சிறப்பு முயற்சி எடுப்பதாக கூறினார். ஆனால், கட்சியை விட்டு விலக நினைப்போரிடம் பேசுவதால் பயன் இல்லை என்றும், வளர்த்தெடுத்து மரியாதையும் அடையாளமும் தந்த கட்சியை விட்டு வேறு கட்சியில் சேர்ந்தவர்களுக்கு எப்போதும் மரியாதை கிடைக்காது என்றும் அவர் தெரிவித்ததாக நிர்வாகிகள் கூறினர்.