சென்னையில், மோசடி மூலம் பெற்ற பணத்தை பயன்படுத்தி கல் குவாரி நடத்தி, திருமண மண்டபம் கட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது கூட்டாளி குறித்து சென்னை மாநகர போலீசார் மற்றும் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு (EOW) விசாரணை தொடங்கியுள்ளது.

ஷீலா மேரி (49) 2023-ல் திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். பின்னர் ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில், கொடுங்கையூரை சேர்ந்த பிரபு மணி (37) என்பவருடன் சேர்ந்து, துணை கமிஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் தள்ளுபடி விலையில் தங்கம் தருவதாக கூறி ரூ.20 கோடி வரை பெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

விசாரணை தரப்பின் தகவலின்படி, சுங்கத்துறை பறிமுதல் செய்ததாக கூறப்படும் தங்கக்காசுகளை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், இந்த நடவடிக்கைகளில் அரசு வழங்கிய போலீஸ் வாகனமும் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புகாரின் அடிப்படையில் ஷீலா மேரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்; பிரபு மணியை EOW போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் வாங்கிய சொத்துகள் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், மோசடி பணத்தில் கல் குவாரி நடத்தி, திருமண மண்டபம் கட்டியதாக கிடைத்த தகவலின் பேரில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.