மாணவிகளின் புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் நடந்த இரு தனித்தனி சம்பவங்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில், ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆமோஸ் தேவசகாயம் (52) 10ஆம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. பிப். 22 அன்று புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரது தோழியையும் காரில் அழைத்து வந்தபோது, முன்சீட்டில் அமர்ந்திருந்த மாணவியிடம் மீண்டும் அத்துமீறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புதுக்கோட்டை மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஈரோடில், திண்டல் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (47) தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர். மற்றொரு கல்லூரியில் நடந்த பருவத் தேர்வில் அறை கண்காணிப்பாளராக இருந்தபோது, விடைத்தாளை வழங்க வந்த 20 வயது மாணவியை பின்புறமாக கட்டிப்பிடித்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
மாணவியின் புகாரின் பேரில் ஈரோடு மகளிர் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர்.





