வேலூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், “சோபாவுக்காக விலை போய்விட்டேன்” என்று தன்னை அற்பத்தனமாக விமர்சிப்பதாக கூறி வேதனை தெரிவித்தார்.
வேலூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து துணை சபாநாயகர், எட்டு அமைச்சர்கள் என உயர்ந்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறை என குறிப்பிட்டார்.
2015-ல் தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட “கூட்டணி ஆட்சி” என்ற கருத்தின் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணி உருவானதாகவும், 2016 தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு தன்னை குற்றம் சாட்டியதாகவும் அவர் நினைவூட்டினார்.
தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இசைவு பெற்ற பிறகே வெளியே வந்து த.வெ.க. அரசை ஆதரித்ததாக கூறிய அவர், திமுக தோல்விக்கு யார் காரணம் என்பதை விட த.வெ.க. வெற்றிக்கு என்ன காரணம் என்பதை ஆராய வேண்டும் என்றார். இந்த தேர்தலில் மதம், சாதி, கூட்டணி பலம் போன்றவற்றை மக்கள் ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், த.வெ.க. மற்றும் விசிக இடையே இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும் கூறினார். 2026 தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. நிலை கவலைக்குரியதாக மாறும் என தேர்தலுக்கு முன்பே பலமுறை சுட்டிக்காட்டியதாகவும், அது இன்று நடந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.





