வாஷிங்டன்: உலகளாவிய கடல் வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தைத் தடை செய்யவோ சீர்குலைக்கவோ முயன்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரவு முழுவதும் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய டிரம்ப், அந்த ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் இயக்கத்தில் இடையூறு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்ததாக தெரிவித்தார்.

முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையில் முற்றுகை அல்லது தடங்கல் ஏற்பட்டால் அமெரிக்கா “முழு பலத்துடன்” பதிலடி கொடுக்கும் என்றும், ஜலசந்தியை மூடினால் “உங்கள் நாடே இருக்காது” என்றும் அவர் கூறினார்.

உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா நேரடி செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை ஏற்கக்கூடும் எனவும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் சரக்குகளுக்கு போக்குவரத்துக் கட்டணங்களை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

தேவைப்பட்டால் ஜலசந்தியை கைப்பற்றுவோம் என்றும், ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.