வாஷிங்டன்: ஈரான் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாகவும், இனி ஒன்றிணைந்து செயல்படும் எதிர்காலத்தை நோக்கி நகர்கிறோம் என்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.
மேற்காசியாவில் மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், ஈரான்–அமெரிக்கா இடையே சமீபத்தில் 14 அம்சங்களுடன் கூடிய தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இறுதி அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க 60 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடைவெளியில் இருதரப்பும் நிலுவையில் உள்ள முரண்பாடுகளை பேசி தீர்க்க முடிவு செய்துள்ளன.
அந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, சுவிட்சர்லாந்தில் ஈரான் அமைதி பேச்சுக் குழுவினருடன், ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழு பேச்சு நடத்தியது. லெபனான் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பேச்சு சுமுகமாக நடந்ததாகவும், எதிர்கால நட்புறவுக்கான “புதிய அத்தியாயம்” என்ற நம்பிக்கையை இது உருவாக்கியதாகவும் வான்ஸ் கூறினார்.
அமெரிக்க தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அதிபரின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னர், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் பங்கேற்றனர். ஈரான் தரப்பில் பார்லி சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கலந்து கொண்டனர்.
மத்தியஸ்தப் பங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரும், சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ் உள்ளிட்டோர் மற்றும் கத்தார், பாகிஸ்தான் நாடுகளின் முக்கிய தூதர்கள், அதிகாரிகளும் கூட்டத்தில் இருந்தனர்.





