பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் ராஜினாமாவை அறிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சிக்குள் அவருக்கு எதிரான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரதமராக பதவியேற்ற ஸ்டார்மர், பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து மறுத்து வந்தார். ஆனால் கட்சிக்குள் அழுத்தம் குறையவில்லை.
இந்த நிலையில், மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. மேக்கர்பீல்டு தொகுதியில் மூத்த தலைவர்களில் ஒருவரும் மான்செஸ்டர் நகர மேயருமான ஆன்டி பர்னம் போட்டியிட்டு, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது தொழிலாளர் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஸ்டார்மர் மீது அதிருப்தியில் இருந்த கட்சி தலைவர்கள் பலரும், கட்சி தலைமைப் பொறுப்புக்கு பர்னம் வர வேண்டும் என தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். ஆதரவு குறைந்ததை உணர்ந்த ஸ்டார்மர் ராஜினாமா அறிவித்த நிலையில், தொழிலாளர் கட்சி தலைமைப் பதவிக்கு போட்டியிடப் போவதாக பர்னம் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு முறை கட்சி தலைமைப் போட்டியில் தோல்வியடைந்த பர்னம், இந்த முறை கட்சி தலைவர் பதவியும் பிரதமர் பதவியும் பெற வாய்ப்பு அதிகம் என பிரிட்டன் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.





