காங்கிரஸ் கட்சியில் விரைவில் தலைமை மாற்றங்கள் நடைபெறலாம் என்றும், தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களின் மாநிலத் தலைவர்கள் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதவிக்காலம் வரும் அக்டோபரில் முடிவடைவதைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் பேசப்படுகின்றன. அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், ஹிமாச்சல் ஆகிய ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய தலைமையிலேயே தேர்தலை சந்திப்பதில் தேசிய நிர்வாகிகள் விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது. பதவிக்கால நீட்டிப்பும் மேலிடத்திற்கு விருப்பமில்லை என்ற தகவலும் உள்ளது.

இதனால் இடைக்கால அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் பி. சிதம்பரம் ஆகியோரில் ஒருவரை நியமிக்க டில்லி தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அசோக் கெலாட்டுக்கு வாய்ப்பு அதிகம் எனவும் தகவல்.

அடுத்த மாதம் 8, 9 தேதிகளில் டில்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் மாற்றம் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி, விஷ்ணுபிரசாத், பிரவின் சக்கரவர்த்தி மற்றும் முன்னாள் எம்.பி. செல்லகுமார் ஆகியோர் போட்டியில் இருப்பதாக தகவல்.

இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து கார்கேவிடம் பேசியதாகவும், தனது கோரிக்கையை ஏற்று தலைமை தன்னை விடுவிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.