சென்னை: தவெகவுக்கு சிபிஎம் வெளிப்புற ஆதரவு வழங்கவில்லை என்றால் மே 10ஆம் தேதி பதவியேற்பு விழாவே நடைபெற முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.
பேட்டியில் அவர், கட்சியின் மாநிலக் குழு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே வெளிப்புற ஆதரவு என்ற நிலைப்பாட்டை பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்ததாக கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவது முக்கியம் என்றும், அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சியாக இருப்பதால் சட்டப்படி தவெகவுக்கே அரசு அமைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் விளக்கினார்.
மே 8 மற்றும் மே 9 அன்று இருந்த சூழ்நிலையில் சிபிஎம் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் மே 10 பதவியேற்பு நடைபெறாது என்றும், அதற்கு மாற்றாக மே 10க்கு பிறகு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்றக்கூடாது என்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் நீண்ட போராட்டம் நடத்தி வருவதாகவும், பாஜக ஆட்சி என்ற பெயரில் மறைமுகமாக ஜனாதிபதி ஆட்சி வருவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார். அதனைத் தடுக்கவே தவெகவுக்கு வெளிப்புற ஆதரவு என்ற அரசியல் முடிவு எடுக்கப்பட்டதாகவும் சண்முகம் தெரிவித்தார்.





