டல்லாஸ்: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ஜே பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஆஸ்திரியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இரட்டை கோல் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதின. 9-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தாலும், அதை எடுத்த மெஸ்ஸி கோலாக மாற்றத் தவறினார்.
ஆனால் 38-வது நிமிடத்தில் மெடினா கொடுத்த பாஸை சரியாகப் பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது கோல் எண்ணிக்கையை 17 ஆக உயர்த்தி, ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசே (16) வைத்திருந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
இரண்டாம் பாதி கூடுதல் நேரத்தில் (90+5), மெஸ்ஸி பந்துடன் முன்னேறி நான்கு ஆஸ்திரிய வீரர்களை ஏமாற்றி மீண்டும் கோல் அடித்தார். தொடர்ந்து இரு வெற்றிகளுடன் 6 புள்ளி பெற்ற அர்ஜென்டினா, ரவுண்டு-16 சுற்றுக்கு முன்னேறியது.





