பரந்துாரில் திட்டமிடப்பட்ட இரண்டாம் விமான நிலையத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் புதிய ஒருங்கிணைந்த “பசுமை” விமான நிலையங்களை அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்கள் குறிப்பிடப்படுகின்றன.

முந்தைய தி.மு.க. அரசு, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில் சுமார் 5,600 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாம் விமான நிலையத்தை அமைக்க திட்டமிட்டிருந்தது. அரசு நிலங்களுக்கு அப்பால் சுமார் 3,700 ஏக்கர் தனியார் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை சுமார் 1,700 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சி அமைந்த பின்னர், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன. பரந்துார் திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விஜய் முன்பே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாற்று நகரங்களில் விமான நிலைய வளர்ச்சியை முன்னிறுத்தும் ஆலோசனைகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் விமான போக்குவரத்து மற்றும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையம் உச்ச கொள்ளளவை நெருங்கியுள்ள நிலையில், சர்வதேச அளவில் சென்னையை முக்கிய வணிக மையமாக முன்னிறுத்த பரந்துார் திட்டம் அவசியம் என அவர்கள் கூறுகின்றனர். இரண்டாம் நிலை நகரங்களின் வளர்ச்சி முக்கியமானதுதான் என்றாலும், அது தலைநகரின் கட்டமைப்பு தேவைக்கு மாற்றாக மாறக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.

மேலும், சர்வதேச விமான நிறுவனங்களும் பெரிய முதலீட்டாளர்களும் பொதுவாக தலைநகரை மையமாகக் கொண்டு திட்டமிடுவதால், பரந்துார் திட்டத்தில் நீடிக்கும் தொய்வு முதலீட்டாளர்களிடையே எதிர்மறை பார்வையை உருவாக்கக்கூடும் என எச்சரித்தனர். குழப்பம் தவிர்க்க, சென்னையின் பொருளாதாரத் தேவை மற்றும் உலகத் தர விமான நிலையத் தேவைக்கு இடையிலான சமநிலையை அரசு தெளிவுபடுத்தி விளக்கம் வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.