கத்தாரின் ராஸ்லபான் தொழிற்பேட்டையில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தியர்கள் 12 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தால் ஆலை செயல்படாமல் இருந்த நிலையில், மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெடிப்பு ஏற்பட்டதுடன் தீ வேகமாக பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத் அல் காபி இந்த சம்பவத்தை உறுதி செய்தார். உயிரிழந்தவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள் என்றும், மொத்தம் 66 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்; காயமடைந்தவர்களில் இந்தியர்களும் உள்ளனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் அமைச்சர் கூறினார். வெடிப்பின் அதிர்வுகள் ராஸ்லபானில் இருந்து 70 கிலோமீட்டர் வரை உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பாக கத்தார் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளது.