விருதுநகரில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசி விலை கிலோக்கு ரூ.8 வரை உயர்ந்துள்ளது. டீசல் விலை உயர்வும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து செலவு அதிகரிப்பும் இதற்குக் காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா போர் சூழ்நிலையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உருவாகி விலை உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் நாட்டில் மே 15 முதல் பெட்ரோலிய நிறுவனங்கள் நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்தியதாகவும் கூறப்படுகிறது.

டீசல் விலை உயர்வால் சரக்குகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்லும் லாரிகளின் வாடகை கட்டணம் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல். இதன் தாக்கம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் பிரதிபலித்துள்ளது.

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரும் கர்நாடகா பொன்னி, நெய் கிச்சடி உள்ளிட்ட பல அரிசி ரகங்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 10 கிலோ பையில் ரூ.40, 26 கிலோ பையில் ரூ.150 வரை உயர்ந்துள்ளதாகவும், சில்லரை விற்பனையில் கிலோக்கு ரூ.8 வரை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.