மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஜிபே மூலம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ.) ராஜாவிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இரு மாதங்களில் ரூ.20.45 லட்சம் வரை பரிவர்த்தனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊராட்சி செயலர்களிடம் பி.டி.ஓ. லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம், டவுன் பஞ்சாயத்து தணிக்கை பிரிவு உதவி இயக்குநர் தலைமையில் வரிவசூல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பி.டி.ஓ. மற்றும் ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்து உதவி இயக்குநர் புறப்பட்ட பின்னர், மதுரை ஏ.டி.எஸ்.பி. சத்யசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் சோதனை நடத்தி, கணக்கில் காட்டப்படாத ரூ.76,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், அலுவலக டேட்டா ஆப்பரேட்டர் அஜித் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஏப். 1 முதல் ஜூன் 31 வரை அஜித்தின் ஜிபே கணக்கை ஆய்வு செய்ததில், பல ஊராட்சி செயலர்கள் அனுப்பிய தொகை ரூ.20.45 லட்சம் வரை இருப்பது தெரிய வந்தது. நேற்று காலை மட்டும் இரு செயலர்கள் ரூ.10,000 மற்றும் ரூ.15,000 அனுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜா, அஜித் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்களிடம் விசாரணை தொடர்கிறது.