மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியில் இருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு ஆதரவாக மாறியுள்ளனர். இந்த மாற்றத்துக்குப் பின்னணி முயற்சியை ஷிண்டே தரப்பு ‘ஆபரேஷன் டைகர்’ என குறிப்பிடுகிறது.

ஒருகாலத்தில் ஒன்றாக இருந்த சிவசேனா, சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாகப் பிளவுபட்டது. உத்தவ் தாக்கரேவும், ஏக்நாத் ஷிண்டேவும் தாங்களே ‘ஒரிஜினல்’ அமைப்பு என உரிமை கோரிய நிலையில், தேர்தல் ஆணையம் ஷிண்டே அணியையே ஒரிஜினல் சிவசேனாவாக அங்கீகரித்தது.

லோக்சபா தேர்தலில் உத்தவ் அணியில் போட்டியிட்ட 9 பேர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றனர். ஆனால் சட்டசபை தேர்தலில் பாஜ–ஷிண்டே சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்தன.

கடந்த சில வாரங்களாகவே கசிந்துவந்த கட்சித்தாவல் விவகாரம், ஞாயிற்றுக்கிழமை வெளிப்படையாகியது. 6 எம்.பி.க்களும் ஷிண்டே உடன் ஒரே மேடையில் தோன்றி, தாங்கள் ‘ஒரிஜினல்’ சிவசேனாவில் இணைந்ததாக அறிவித்தனர்.

இதையடுத்து, கட்சித்தாவல் சட்டத்தின் அடிப்படையில் அந்த எம்.பி.க்களின் பதவிகளை பறிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக உத்தவ் தரப்பு தெரிவித்துள்ளது.