தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை, திருப்பூர், சேலம் மாநகர காவல் நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரவின்படி, ஆயுஷ் மணி திவாரி தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் போலீஸ் கமிஷனராக ராஜேஸ்வரி பொறுப்பேற்கிறார்.

சென்னையில், சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் கமிஷனராக கபில் குமார் சரத்கர் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து கூடுதல் கமிஷனராக சாமுண்டீஸ்வரி, தலைமையிட கூடுதல் கமிஷனராக பாபு, சென்னை சென்ட்ரல் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக தேன்மொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடலோர பாதுகாப்பு ஐஜியாக பிரவேஷ் குமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அனில் குமார் கிரி, சமூக நீதிப்பிரிவு ஐஜியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமையிட நிர்வாக ஐஜியாக ராதிகா, விஜிலன்ஸ் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக மகேஸ்வரி, தலைமையிட ஐஜியாக துரைகுமார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் போலீஸ் கமிஷனராக ஜோஷி நிர்மல் குமார் பொறுப்பேற்கிறார்.