சென்னை: முந்தைய திமுக அரசின் ஐந்து ஆண்டு காலத்தில் தமிழகத்திலிருந்து 25 முதலீட்டு திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்ததாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.30 லட்சம் கோடி என்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். இதனால் தமிழக இளைஞர்கள் 2.03 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்ததாகவும் அவர் கூறினார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலீடுகள் வெளியேறியதற்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதமும், அனுமதி பெறுவதில் நிலவிய லஞ்ச ஊழலும் முக்கிய காரணங்கள் என குற்றம்சாட்டினார். சட்டசபையில் குற்றச்சாட்டை கூறிவிட்டு ஆதாரமின்றி வெளியேறியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியையும் அவர் விமர்சித்தார்.
வெளியேறிய திட்டங்களால் ஏழு மாநிலங்கள் பயனடைந்ததாக கூறிய அமைச்சர், 2024ல் டாடா எலக்ட்ரானிக்ஸ் செமிகண்டக்டர் வடிவமைப்பு திட்டம் குஜராத்திற்கும், ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தின் மின்சார வாகன பேட்டரி மற்றும் ஸ்மெல்டிங் திட்டம் ஒடிஷாவிற்கும் சென்றதாக குறிப்பிட்டார். சுசூகி மோட்டார் வாகன திட்டமும், மைக்ரான் டெக்னாலஜியின் ஏ.டி.எம்.பி. திட்டமும் குஜராத்திற்கு சென்றதாகவும், டொயோட்டா மோட்டார் திட்டம் மகாராஷ்டிராவுக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீப வாரங்களில் ஆந்திராவுக்கு முதலீடுகள் அனுப்பப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், கடந்த 40 நாட்களில் எந்த முதலீட்டு திட்டமும் தமிழகத்திலிருந்து வெளியேறவில்லை என்றார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான அதானி கிரீன் எனர்ஜியின் நீரேற்று மின் திட்ட முதலீடு தமிழகத்திலேயே தொடர்வதாகவும், ‘கேப்ஸ்’ நிறுவனத்தின் செயற்கைக்கோள் மையத்தை தமிழகத்தில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை சாதகமாக நடைபெறுவதாகவும் கூறினார்.
மேலும், வெளியேறக்கூடிய நிலையில் இருந்த ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்புகொண்டு அரசு ஆதரவு அளிப்பதாக உறுதி செய்து தக்க வைத்ததாக அமைச்சர் தெரிவித்தார். மோதிலேன், யுசாங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அனுமதி தாமதம் மற்றும் லஞ்சத்தைத் தடுக்க 21 நாட்களுக்குள் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படும் என அறிவித்ததாகவும் அவர் கூறினார்.





