கொல்கட்டா: திரிணமுல் காங்கிரஸில் செயல்படும் அதிருப்தி குழு, கட்சி தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி நீக்கப்பட்டதாகவும், புதிய தேசிய செயற்குழு அமைக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

முந்தைய சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சியில் பிளவு ஏற்பட்டதாக தகவல் கூறுகிறது. மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தொடர்பான அதிருப்தி காரணமாக பல நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிருப்தி குழுவை, மம்தா பானர்ஜி முன்பு கட்சியிலிருந்து நீக்கிய ரிதபிரதா பானர்ஜி தலைமையிலானதாக கூறப்படுகிறது. முக்கிய நிர்வாகிகள் மற்றும் 60 எம்.எல்.ஏ.க்கள் வரை இதில் உள்ளதாகவும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று நடைபெற்றதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

அக்கூட்டத்தில், ஹவுரா மத்திய சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. அரூப் ராய் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். துணைத் தலைவர்களாக பிர்ஹாத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், ரத்தின் கோஷ், சபினா யாஸ்மின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

பொதுச்செயலர்களாக ரிதபிரதா பானர்ஜி, ஜாவேத் கான், சந்தீபன் சாஹா ஆகியோர் பொறுப்பேற்றதாகவும், பொருளாளராக அன்சாரி நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.