அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சேர்ந்த நான்கு பேருக்கு, தங்கள் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மீண்டும் கட்சி சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பெருந்துறை ஜெயகுமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோர், தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி மீது அதிருப்தி தெரிவித்த நிலையில், எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகி த.வெ.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.

த.வெ.க. மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், சபாநாயகர் நீங்கலாக த.வெ.க. 106, காங்கிரஸ் 5, வி.சி.க. 2, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் 4, முஸ்லிம் லீக் 2 என அரசுக்கு மொத்தம் 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்தனர். கூட்டணி கட்சிகள் கடைசி வரை தொடருமா என்ற நம்பிக்கை முதல்வர் விஜய்க்கு முழுமையாக இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

இந்த பின்னணியில், த.வெ.க. மேலிடப் பிரமுகர்கள் வழியாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ராஜினாமா செய்திருந்தாலும் ‘சர்வே’ அடிப்படையில்தான் சீட் என்ற முடிவு முதல்வரின் நிலைப்பாடு எனவும் கூறப்படுகிறது. ஆனால், அவர்களிடம் பேசிய அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பல வாக்குறுதிகளை அளித்ததாகவும், அதனால் இடைத்தேர்தலில் சீட் உறுதி என்ற நம்பிக்கையில் அவர்கள் ராஜினாமா செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது ராஜினாமா செய்தவர்களின் பெயர் தொகுதிகளில் மோசமாக இருப்பதாகவும், மீண்டும் அவர்களுக்கே சீட் கொடுத்தால் தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தால் முதல்வர் விஜய் தயங்குவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், வாரியத் தலைவர் போன்ற பதவிகளை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளதாகவும், இதனால் நால்வரும் தங்களை ஏமாற்றியதாகக் கூறி தங்களை அழைத்து வந்தவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.