அபுதாபி: இந்தியாவின் பிரமோஸ் ‘சூப்பர்சோனிக் க்ரூஸ்’ ஏவுகணை மற்றும் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பை வாங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசியாவில் சமீபத்தில் நிலவிய போர் பதற்றம் தற்காலிகமாக குறைந்தாலும், தன் நாட்டின் வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை யுஏஇ வேகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இருதரப்பு பேச்சுகள் ஆரம்பகட்டத்திலேயே இருந்தாலும், செயல்பாடுகள் விரைவாக முன்னேறி வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்திய மத்திய அரசும் யுஏஇ அரசும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
யுஏஇ ஏற்கனவே அமெரிக்காவின் ‘தாட்’ மற்றும் ‘பேட்ரியாட்’ போன்ற பாதுகாப்பு அமைப்புகளை பெற்றிருந்தாலும், ஒரே நாட்டை சார்ந்திராமல் ஆயுத கொள்முதலை பல நாடுகளுக்கு விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஒப்பந்தம் நிறைவேறினால், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா ஆகியவற்றைத் தொடர்ந்து பிரமோஸ் வாங்கும் நான்காவது வெளிநாடாக யுஏஇ மாறும்.
ஆகாஷ்தீர் என்பது பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) மற்றும் இந்திய ராணுவம் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கிய தானியங்கி வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பாக குறிப்பிடப்படுகிறது; ரேடார் தகவல்களின் அடிப்படையில் ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்கள் போன்ற அச்சுறுத்தல்களை கண்டறிந்து எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.





