சென்னை: ஆள் பிடிக்கும் பணிகளை கைவிட்டு ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தினார். சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தை முடித்து வைத்து அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்கும் முயற்சியில் அரசு இறங்கியிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அந்த திட்டம் 41 லட்சம் மாணவர்களுக்கு பயனளித்ததாகவும் கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு அறிவித்த ₹136 கோடி குறுவை தொகுப்பு போதாது என விவசாயிகள் போராட்டத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விவசாய சங்க பிரதிநிதிகளை முதல்வர் அழைத்து பேசி தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.
சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், அரசு பள்ளிகளில் குத்துப் பாடல்கள் போட்டு ‘ரீல்ஸ்’ எடுக்கும் செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்றார். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என கூறிய அவர், கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும், 24 மணி நேரத்தில் பல பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தலைமைச் செயலர் தலைமையில் ‘தமிழக முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு கமிஷன்’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது செயல்படும் ‘வழிகாட்டி’ நிறுவனம் குறித்து முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் பதில் சொல்லாமல் இருப்பதாகவும், சட்டம்-ஒழுங்கை காக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.





