சட்டசபையில் முதல்வர் விஜய், தங்கள் அரசு “ஊழல் செய்ய கற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று கூறி, ஆட்சி நடத்த தெரியாது என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்தார். முந்தைய ஆட்சிகளில் மாநில கருவூலம் திசைமாறி சென்றதாகக் கூறி, தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டதாக தெரிவித்தார்.

த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு டெண்டர் விலையை உயர்த்தி ஊழல் செய்வது, பணியிடமாற்றம்/பதவி உயர்வுக்கு பணம் பறிப்பது, புதிய பணியிடங்களை உருவாக்கி விற்பது, அரசு வருமானத்தை தனிப்பட்ட கஜானாவுக்கு மடைமாற்றுவது, கோவில் பணத்தை கொள்ளையடிப்பது போன்றவை “தெரியாது” என பட்டியலிட்டு பேசினார். முறைகேடு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளவும் ஆசைப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நிதி நெருக்கடியிலும் ரூ.5,932 கோடி அளவிலான விவசாய கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மின் தடையை குறைக்க 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள், 125 மின் தடை ரோந்து வாகனங்கள், 24 மணி நேர கண்காணிப்பு ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், புதிதாக 77 மின் தடை நீக்க மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறி, விரைவில் மின் தடை முழுமையாக சரி செய்யப்படும் என்றார்.

சட்டம்-ஒழுங்கு குறித்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் கூறினார். மே 10க்கு பிறகு மட்டும் உருவான பிரச்னை அல்ல; பல ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டதன் விளைவு எனவும், எதிர்க்கட்சிகள் இதை அக்கறையாக அல்ல, அவதூறு அரசியலாக பயன்படுத்துவதாகவும் விமர்சித்தார்.

மேலும், “இது மன்னராட்சி கிடையாது; மனசாட்சியுள்ள மக்களாட்சி” என்று கூறிய முதல்வர், கேள்வி கேட்கவும் விமர்சனம் செய்யவும் அனைவருக்கும் உரிமை உண்டு என்றார். நடுநிலையோடு மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை முன்வைத்தால் அரசு கேட்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.