சென்னை: மத்திய அரசுடன் ஒவ்வொரு விஷயத்திற்கும் மோதல் போக்கை கடைப்பிடிக்க அரசு விரும்பவில்லை என்று முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்தார். மத்திய அரசு சார்ந்த கட்சியுடன் கொள்கை அளவில் எதிர்நிலையிலிருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சியே முதன்மை; அதற்காக மாநில உரிமைகளையும் கொள்கையையும் விட்டுக்கொடுப்பதில்லை என்றார்.
கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தினார். இந்த நிலைப்பாட்டை திசைதிருப்ப முயல்வோர் மக்கள் மத்தியில் தோல்வியடைவார்கள் என்றும், மக்களுக்கும் சிறுபான்மை சமூகத்தினருக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் சந்தேகம் வேண்டாம் என்றும் கூறினார்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ‘நிடி ஆயோக்’ கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான நிதி விடுவிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
அண்டை மாநிலங்களுடன் நட்புறவு மாநில வளர்ச்சிக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் அவசியம் எனக் குறிப்பிட்ட முதல்வர், நதி நீர், பொருளாதாரம், கல்வி, கலாசாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் நல்லுறவை தமிழக அரசு பேணி வருவதாகவும், அதை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கட்சி நிதி என்ற பெயரில் நடந்த கொள்ளையைத் தடுத்து அந்த நிதியை அரசு கஜானாவுக்கு மாற்றுவோம் எனக் கூறிய அவர், ஊழல் விவகாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவருகின்றன என்றும், தங்கள் ஆட்சியைப் பற்றி அவதூறு பரப்பப்படுகின்றது என்றும் குற்றம்சாட்டினார். அமைச்சரவையில் பட்டியலினத்தவர்களுக்கு எட்டு இடங்களும், பெண்களுக்கு நான்கு இடங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





