சென்னை: சமீபத்திய தேர்தலில் ஜாதி, மத அரசியலுடன் சேர்த்து “காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாசாரத்தையும்” முற்றாக உடைத்துள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசும்போது, 100 சதவீதம் வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என உறுதியளித்தார்.
17வது சட்டசபையில் 12 கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இருப்பதை குறிப்பிட்ட அவர், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் பணியே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். கவர்னர் உரை விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசிய விதத்தையும் அவர் விமர்சித்தார்.
அரசியலுக்கு திடீரென வந்தவர் என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த விஜய், சாதாரண நடிகராக தொடங்கி கடுமையாக உழைத்து முன்னேறியதாக கூறினார். கட்சி தொடங்குவதற்கு முன்பே வீடு வீடாக சென்றதாகவும், கூட்டணி இன்றி தேர்தலை சந்தித்து 35 சதவீத வாக்குகளை பெற்றதாகவும், 1.72 கோடி பேர் வாக்களித்த நிலையில் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டரை ஆண்டுகள் வலி, வேதனை நிறைந்ததாக கூறிய அவர், கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் தங்கள் மீது பழி சுமத்தப்பட்டதாக நினைவூட்டினார். இருப்பினும் மக்களுக்காக எதையும் தாங்க தயாராக இருப்பதாகவும், ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை, 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப் பொருள் தடுப்பு படை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியதாகவும் கூறினார்.
மேலும் பத்திரப்பதிவு துறையில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவும், சட்டவிரோத கல் குவாரிகள் மற்றும் கனிமவள கடத்தலை தடுத்ததாகவும், மதுபான கடைகளை மூடியதாகவும் அவர் தெரிவித்தார். 2017 முதல் 2026 வரை ஆட்சியில் இருந்த காலத்தில் ஏற்பட்ட குறைகளை படிப்படியாக சரி செய்து, லஞ்சம்-ஊழல் இல்லாத நிர்வாகத்தையும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலையும் உருவாக்குவதே தங்கள் ஒரே நோக்கம் என முதல்வர் விஜய் கூறினார்.





