சட்டசபையில் முதல்வர் விஜய் அளித்த பதிலுக்குப் பிறகு திமுக வெளியேறியதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஏன் பேசவில்லை என்று திமுக கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் முதல்வர் பேசத் தொடங்கியதும் திமுக “திணறி” அவையிலிருந்து வெளியேறியதாகவும் கூறினார்.
தான் பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு லைசென்ஸ் வழங்கியபோது கட்சி நிதி பெறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். அப்படி ஏதேனும் இருந்தால் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கான தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கும் பணியில் முகாம்கள் அமைத்து நடவடிக்கை எடுத்ததாகவும், 219 பள்ளிகளுக்கான சான்றிதழ் வழங்கும் போது 9 இடங்களுக்கு தானே சென்று தேவையான வசதிகளை செய்து கொடுத்ததாகவும் அவர் கூறினார். பள்ளிக்கல்வித் துறையில் இதுவரை இல்லாத சாதனைகள் செய்ததாகவும், அனைவருக்கும் இருமுறை இலவசமாக NOC வழங்கப்பட்டதா என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிவிக்கச் சொல்லுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.





