ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியா–அமெரிக்கா கூட்டாண்மையில் ஹைதராபாத்தின் அதிகரித்து வரும் பங்கைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக இதை மாநில அரசு குறிப்பிடுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ‘தெலங்கானா ரைசிங்’ மாநாட்டின்போது, டிரம்பின் பெயரை ஒரு சாலைக்கு சூட்டுவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருந்தார்.

அதன்படி, ஹைதராபாத் நிதி மாவட்டமான நானக்ராம்குடாவில், அமெரிக்க தூதரகத்தை ஒட்டியுள்ள முக்கிய சாலை ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என பெயரிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் தெலங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பட்டி விக்ரமார்கா, ஹைதராபாத் குடும்பங்களுக்கு அமெரிக்கா என்பது வரைபடத்தில் உள்ள ஒரு நாடு மட்டும் அல்ல; பாஸ்டனில் இருக்கும் மகன், நியூ ஜெர்சியில் இருக்கும் மகள், சீட்டிலில் இருக்கும் நண்பன் போன்ற உறவுகளையும் நினைவூட்டும் இடம் என கூறினார். ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்ற பெயரிடுதல் வெறும் சடங்கு ரீதியான பலகையாக இல்லாமல், மாணவர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், குடும்பங்கள் மற்றும் கனவு காண்பவர்களின் பயணங்களைச் சுமந்து செல்லட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.