டெஹ்ரானில் நடைபெற உள்ள முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா–இஸ்ரேல் போரின் போது அலி கமேனி பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குப் பின்னரும் போர் நீடித்ததால் இறுதிச்சடங்குகளை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிட்ட நிகழ்ச்சிகள் பின்னர் ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூலை 4 முதல் ஜூலை 9 வரை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என ஈரான் அறிவித்துள்ளது. ஜூலை 4 அன்று நிகழ்ச்சிகள் தொடங்கும் நிலையில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4 அன்று டெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா வளாகத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அங்கு கமேனியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். டெஹ்ரானில் பெரிய ஊர்வலம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் நஜாப், கர்பலா நகரங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அதன் பின்னர், ஈரானின் வடகிழக்கில் உள்ள அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் இருக்கும் தர்காவில் ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெற உள்ளது.





