பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்தக் கருத்து, ஏர் இந்தியாவின் ‘கனிஷ்கா’ விமானம் குண்டுவெடித்து சிதறிய சம்பவத்தின் 41வது நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டதாகும். 1985 ஜூன் 23 அன்று கனடாவின் டொரான்டோவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட அந்த விமானம், லண்டன் செல்லும் வழியில் அயர்லாந்து வான்பரப்பில் சென்றபோது நடுவானில் வெடித்துச் சிதறியது.

இந்த தாக்குதலில் 22 விமான ஊழியர்கள் மற்றும் 307 பயணிகள் என மொத்தம் 329 பேர் உயிரிழந்தனர். காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கிய தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

நினைவு நாள் அறிக்கையில், இந்த “கோரமான” பயங்கரவாதச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றுவதாகவும், பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் எதிர்க்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.