காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தோல்வியடைந்ததற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பி. சிதம்பரம் மற்றும் அவரது மகன் எம்.பி. கார்த்தி சிதம்பரம் காரணம் என, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஐவர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவிடம் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் கூறுகையில், சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் தொடர சிதம்பரம் முக்கிய பங்கு வகித்ததாகவும், அதை பல தொண்டர்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். காரைக்குடியில் சிதம்பரம் தினமும் தெரு தெருவாக நடந்து சென்று ஓட்டு கேட்டாலும், கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க.) வாக்களித்ததாகவும் கூறினர்.
மேலும், காரைக்குடியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சிதம்பரம் ஆதரவாளர் சுந்தர்ராஜன் கட்சியிலிருந்து ஒதுங்கியதாகவும், கார்த்தி பிரசாரம் செய்தபோது நிர்வாகிகளிடம் “நான் சொல்வதையே கேட்க வேண்டும்” என்ற போக்கில் நடந்துகொண்டதால் பலர் மனமுடைந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஆதிக்க சக்தி ஆட்டி படைக்கிறது” என்ற வகையில் பெரும்பான்மை சமுதாயத்தை விமர்சித்ததால் அந்த சமுதாயத்தினரின் வாக்குகள் மாங்குடிக்கு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். மேலும், சிவகங்கையில் தொடர்ந்து சிதம்பரமும் கார்த்தியும் எம்.பி. ஆக இருந்து வருவதால் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் பல நிர்வாகிகள் ஒதுங்கியதாகவும் தெரிவித்தனர்.
காரைக்குடியில் த.வெ.க. சார்பில் 46,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் பிரபு காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், சிதம்பரம் நடத்தி வந்த “காங்கிரஸ் ஜனநாயக பேரவை” கட்சியில் பிரபுவின் தந்தை துரை கருணாநிதி மாவட்ட செயலராக இருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக காங்கிரஸ் வாக்குகள் த.வெ.க.வுக்கு நகர்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.





