முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான ஊழல் வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நகராட்சித்துறையில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிட நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய மாநில டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அதிமுக எம்பி இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கே.என்.நேரு தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் வழக்கு வந்தபோது, அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, புதிய அரசு வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதால் கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை திரும்ப பெற முடிவு செய்ததாக தெரிவித்தார்.

இதற்கு கே.என்.நேரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சி மாறினாலும் நடந்து முடிந்த நீதிமன்ற நடவடிக்கையை மாற்ற முடியாது; இதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன என வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கே.என்.நேரு தரப்பின் மறு ஆய்வு மனுக்கள் மற்றும் அரசு தரப்பின் திரும்ப பெற அனுமதி கோரும் மனுவின் விசாரணையை ஜூலை 10க்கு ஒத்திவைத்தனர். அதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவும் பிறப்பித்தனர்.