உத்தரப் பிரதேசத்தின் லக்னோ அலிகஞ்ச் பகுதியில் உள்ள மூன்று மாடி வணிக வளாகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்தக் கட்டடத்தில் செயல்பட்ட அனிமேஷன் மையத்தில் பயிற்சி பெற வந்த மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கட்டட உரிமையாளர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து, அங்கு பணியாற்றிய நிலேஷ்–அனாமிகா என்ற காதல் ஜோடியின் வாழ்க்கையையும் சிதைத்துள்ளது. இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
மேற்கு வங்கத்தில் உள்ள அனாமிகாவின் வீட்டிற்கு அடுத்த வாரம் முறைப்படி பெண் கேட்டு செல்ல நிலேஷின் குடும்பத்தினர் ரயில் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்திருந்தனர். தீ விபத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்புவரை பயணம், திருமண தேதி குறித்து உறவினர்கள் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், மாலையில் நிலைமை முற்றிலும் மாறியது.
திருமண ஏற்பாடுகளுக்காக அலைய வேண்டிய உறவினர்கள், மருத்துவமனையும் பிரேத பரிசோதனை மையமும் இடையே அலைக்கழிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அனாமிகா மட்டுமின்றி, அவரது உறவினரான சவுமில்யா (27) என்பவரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.





