உலகப் பாதுகாப்புக்கு பங்களிப்பதும், வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகளுக்கு ஆதரவளிப்பதும் இந்தியாவின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார். சீனா, ரஷ்யா உள்ளிட்ட 11 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.

தலைநகர் டில்லியில் ஜூன் 22 மற்றும் 23 தேதிகளில் பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு நடைபெற்றது. வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் ஒத்துழைப்பை மேம்படுத்த பிரிக்ஸ் ஒரு முக்கிய தளமாக உருவெடுத்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.

சந்திப்பு குறித்து வெளியிட்ட பதிவில், உலகில் பயங்கரவாதம் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதாக அவர் கூறினார். தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வதிலும், பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் பிரிக்ஸ் முக்கிய பங்காற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பான உலகை உருவாக்கும் முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து பங்களிக்கும் என்றும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.