வழக்கத்தை விட 13 நாட்கள் தாமதமாக மும்பையில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, முதல் நாளிலேயே கடும் மழையுடன் தாக்கம் காட்டி நகரின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று அதிகாலை 4 மணிக்கு மும்பை மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவித்து, இடி-மின்னலுடன் அதி கனமழை மற்றும் மணிக்கு 40–60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரித்தது.

நேற்றிரவு தொடங்கிய கனமழை இன்று காலை வரை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. பல பகுதிகளில் 300 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவான நிலையில், தெற்கு மும்பையில் 248 மி.மீ மழை பதிவாகி, கடந்த 10 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச மழையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது; போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும், விக்ரோலி மேற்கு பகுதியில் ஒரு குடியிருப்பு கட்டத்தின் அருகிலிருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய மற்றும் மேற்கு புறநகர் ரயில் பாதைகள் இணையும் முக்கிய சந்திப்பான தாதர் ரயில் நிலையம், காலை பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியதாக தகவல். தாதரில் கனமழையின் போது கார் மீது மரம் விழுந்ததில் கார் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.