நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தர்மன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா முக்கிய வேடங்களில் நடிக்க, இசையை அனிருத் அமைக்கிறார். விழாவில் பேசிய ரஜினி, “நான் பேசினாலே பிரச்னை தான்” என்று கூறி, பேசாமல் இருந்தாலும் பேசினாலும் விமர்சனம் வரும் என்றும், தன்னை பிடிக்காதவர்களுக்கு எதை செய்தாலும் பிடிக்காது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தப் படத்திற்கு அஸ்வத் நான்காவது இயக்குநர் என ரஜினி தெரிவித்தார். முதலில் ரவிக்குமார், பின்னர் சுந்தர் சி, அதன் பிறகு சிபி சக்கரவர்த்தி என இயக்குநர்கள் மாறி, இறுதியாக அஸ்வத் இயக்க உள்ளதாக அவர் கூறினார். சிபி சொன்ன கதை பிடித்திருந்தாலும், அணு விஞ்ஞானி தொடர்பான சென்சிட்டிவ் கதையாக இருப்பதால் அது நேரம் எடுக்கும் என தள்ளி வைத்ததாகவும் தெரிவித்தார்.

கமலுடன் பணியாற்றுவது குறித்து பேசிய ரஜினி, “கதையை நீங்களே கேட்டு சொல்லுங்கள்” என்று கமல் கூறியதாகவும், படத்தின் பொறுப்புகளை தன்னிடம் ஒப்படைத்தது சிறிது பயமாக இருந்ததாகவும் கூறினார். மேலும், 1970களில் தொடங்கிய நட்பை நினைவுகூர்ந்து, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் தன்னை நடிக்க வைக்க கமல் உதவியதையும், ஆரம்ப காலத்தில் ஊக்கம் அளித்ததையும் நினைவு கூர்ந்தார்.